Saturday 30 August 2014

விநாயகர் நினைவுகள்

கொங்கதேச ஆவணங்களில் விநாயகர் பற்றிய குறிப்புகள் ஏராளமான இடத்தில் காணலாம். அண்ணமார்சாமி கதையில் பிள்ளை வரம் நிறைவேற குளம் வெட்டி விநாயகர் பிரதிஷ்டை செய்தார் கோளாத்தாக் கவுண்டர். அது மட்டுமின்றி அண்ணமார் கதை முழுக்கவே விநாயகர் வழிபாடு இருப்பதை காண முடியும். 




தீரன் சின்னமலை காரையூர் மேலப்பாளையத்தில் ஐந்தடி விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்வித்தார். வெள்ளோட்டில் சாத்தந்தை கூட்டத்தில் பிறந்து வீரபாண்டியன் அமைச்சராகி பின்னர் ஊத்துக்குளியில் நாடமைத்துப்போன காளிங்கராயர் வாய்க்கால் வெட்டியபின், அது துவங்கும்  இடத்தில் நெளிந்த வாய்க்கால் அமைப்புக்கு யோசனை வர காரணமான நாகருக்கு கோயில் வைத்தார். அதே கோயிலில் விநாயகரும் உண்டு. காளிங்கராயர் பிற்கால பாண்டியர் காலத்தவர் என்பதால் விநாயகரும் அவர் பிரதிஷ்டை செய்ததே என்று நம்பலாம். 


கொங்கதேசவரலாற்றில் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு தலையநாடு கன்னிவாடி கன்னகூட்ட மன்றாடியார்களுடையது. அவர்கள் கன்னிவாடியில் இருந்து மோரூர் இடம்பெயர்ந்த போது அவர்கள் பூர்வீகத்தில் இருந்த வெள்ளைவிநாயகரை மோரூர் நாட்டிலும் பிரதிஷ்டை செய்தனர். இவர்கள் குலகுரு ஒருமுறை சஞ்சாரம் வந்தபோது கோயில் பண்டாரம் அவமரியாதை செய்யவே கோயில் வெள்ளைவிநாயகரிடம் வேண்டி பாடவும் குபேர மூலையை பார்த்திருந்த விநாயகர் விக்ரகம் எம மூலை பக்கம் திரும்பிவிட்டது. பயந்து போன மக்கள் பட்டக்காரரிடம் சொல்லவே அவர் குலகுருவிடம் உண்மையை விளக்கி மன்றாடவே திரும்பவும் வெள்ளைவிநாயகரை  வேண்டிப்பாட  சிலை பழைய நிலைக்கு திரும்பியது.
மோரூர் பாம்பலங்காரர் (நாகபூஷனர்)கோயிலில்
உள்ள வெள்ளைவிநாயர் 

மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயிலில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்கள் தேசத்தை பார்த்த நிலையில் விநாயகரை பிரதிஷ்டை செய்துள்ளனர். அவை இன்றும் சேர விநாயகர், சோழ விநாயகர், பாண்டிய விநாயகர் என்று அழைக்கபடுகிறது. 



கீழ்க்கரை பூந்துறை நாடு திருசெங்கோட்டு மலையில் வரடிக்கல்லில் இருக்கும் உச்சிப்பிள்ளையார் பிரசித்தி பெற்றவர். ஒருவருடம் பவுர்ணமி தோறும் மலைக்கு வந்து வரடிக்கல் பிள்ளையாரை வலம் வந்தால் குழந்தை பாக்கியம் உண்டு என்பது ஐதீகம். திருசெங்கோட்டு மலையில் உள்ள தீர்த்தங்களில் முதல் தீர்த்தமே கணபதி தீர்த்தம்தான். அதை கணபதியே உமையம்மையின் பூஜை தேவைகளுக்காண நீருக்காக உருவாக்கினார் என்பது புராண வரலாற்றுச் செய்தி.
வரடிக்கல் பாண்டீஸ்வரர் கோயில் மற்றும்
விநாயகர் கோயில் (உச்சிப்பிள்ளையார்)


திருச்செங்கோட்டு கோயில் ராஜகோபுர அத்தா மண்டபத்தில்
இருக்கும் பிரம்மாண்ட விநாயகர் சிலை 

 அதே கீழ்க்கரை பூந்துறை நாட்டில் மொளசி சமஸ்தானதிற்குட்பட்ட பட்லூர் காணியின் நட்டாத்தீஸ்வரர் கோயிலில் கிழக்கு பார்த்த விநாயகர் விக்ரகம் இருந்தது (தற்போது ‘திருப்பணி என்னும் பேரில் தெற்கு பார்த்து திருப்பட்டுள்ளது; கொங்கதேசத்தில் தெற்கு பார்த்து எந்த விநாயகரும் இல்லை என்பது பயப்பட வேண்டிய விஷயம்). ஒருமுறை காவிரியில் வெள்ளம் வந்தபோது கோயில் குருக்களின் வேண்டுதலுக்கிறங்கி வெள்ளம தணிந்ததை கொங்குமண்டலச் சதகம் சொல்கிறது. 


பட்லூர் காணிக்குட்பட்ட நட்டாத்தீஸ்வரர் கோயில் 

சுந்தரருக்கு பொன் கொடுக்க சிவபெருமான் பிள்ளையாரை ஆய்மகளிடம் அடகு வைத்த நிகழ்வு வெஞ்சமாங்கூடலூரில் நடந்தது. திருமுருகன்பூண்டியிலே சுந்தரரின் களவுபோன பொருட்களை மீட்க விநாயகப்பெருமான் கூப்பிட்டு வழிகாட்டியதால் கூப்பிடு பிள்ளையாரானார். பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கென கொண்டுவந்த பிள்ளையார் வண்டி அச்சாணி முறியவே இறக்கி வைத்த இடத்தில் ஸ்தாபிதமாகிவிட்டார். அந்த க்ஷேத்ரமே இன்றைய புகழ்பெற்ற ஈச்சனாரி விநாயகர் ஆகும்.



கொங்கதேச குடிகளின் மங்கள சடங்குகள் அனைத்துமே விநாயகரை தொழுதே செய்யப்படுகின்றன. கல்யாணத்திற்கு பெண் பார்க்க துவங்குவதில் தொடங்கி, தாலிக்கு பொன் எடுத்து கொடுக்கும்போதும் (மங்கிளியத்துக்கு கொடுத்தல்), முஹுர்த்தக்கால் போடையிலும், மாப்பிள்ளை அழைப்பு வேளை என பல முறை கணபதி வழிபடப்படுவார். கல்யாணம் துவங்கும்போதும், முடிந்த பின்னரும், முடிந்தபின் வீடு புகுமுன் மணமகன்/மணமகள் ஊர் விநாயகர் கோயிலிலும், வீட்டிற்கு வந்து முதல் காரியமாகவும், தாலி நூல் மாற்றும்போதும் (தாலி வில்லையை விட மஞ்சள் கயிரே முக்கியத்துவம் வாய்ந்தது என்பது வழக்கம்) விநாயகர் வழிபாடு நடக்கும். பெண் வீட்டில் கல்யாணம் செய்வதே முறை என்றாலும், தற்போது முறைகெட்டு மண்டபங்களில் பலர் கல்யாணம் செய்வதால் அந்த கல்யாண சத்திரங்களிலேயே விநாயகர் சன்னதி கட்டிவைத்துவிட்டனர். கொங்கதேசத்தின் சிறப்பு வாய்ந்த கல்யாணப் பாடலான மங்கள வாழ்த்தே கணபதியை தொழுதுதான் துவங்குகிறது.


கொங்கதேசத்தில் கிராமங்கள் நிர்மாணம் செய்யப்பட்டபோது மேற்கே அரசமரங்கள் நடப்பட்டதோடு அங்கு விநாயகர் நிறுவி வழிபடப்பட்டார். அதுமட்டுமின்றி கிராமத்தின் கன்னிமூலையில் விநாயகர் இருப்பது பொதுவான விதி. கொங்கதேசத்தின் ஏராளமான சிற்றிலக்கியங்கள் ஆவணங்கள் விநாயகர் வழிபாட்டோடுதான் துவங்குகின்றன.



நிலத்தை உழத்துவங்கையிலும், விதை விதைக்க துவங்கையிலும், கதிரருக்கும்போதும் விநாயகர் வழிபாடு உண்டு. அதற்கான நாட்டுப்புறப் பாடல்கள் கூட கொங்கதேசப்பகுதிகளான தர்மபுரி மற்றும் அரூர் பகுதிகளில் உள்ள கொங்கூர் மற்றும் கொங்கவேம்பு கிராமங்களில் சேகரிக்கப்பட்டுள்ளது. கொங்கதேசத்தில் பட்டிப்பொங்கல் என்று சொல்லப்படும் மாட்டுப்பொங்கலிலும் கணபதி வழிபாடு உண்டு.

உழவுப்பணியின் போது பாடப்படுவது,

காளையே ஏறு...

முந்தி முந்தி வினாயகனே!
முக்கண்ணனார் தம் மகனே!
கந்தருக்கு முன் பிறந்த
காளைக் கணபதியே!-(காளையே)
வேலருக்கு முன் பிறந்த
விக்கினரே முன் நடவாய்,
ஊருக்கு மேற்காண்டே
ஒசந்த தொரு வெப்பாலை.
வெப்பாலை மரத்தடியில்
சப்பாணி பிள்ளையாராம்.
சப்பாணி பிள்ளையார்க்கு,
என்ன என்ன ஒப்பதமாம்!
நீரு முத்தும் தேங்காயாம்,
நிமித்தியமாம் பிள்ளையார்க்கு,
கொத்தோடு தேங்காயாம்
குலைநிறைய வாழைப்பழம்
இத்தனையும் ஒப்பதமாம்-எங்க
சப்பாணி பிள்ளையார்க்கு-(காளையே)

வண்டு மொகராத-ஒரு
வண்ண லட்சம் பூ வெடுத்து
தும்பி மொகராத
தொட்டு லட்சம் பூவெடுத்து
எறும்பு மொகராத
எண்ணி லட்சம் பூவெடுத்து
பாம்பு மொகராத
பத்து லட்சம் பூவெடுத்து
வாரி வந்த பூவையெல்லாம்
வலப்புறமாய்க் கொட்டி வச்சேன்
கொண்டு வந்த பூவை யெல்லாம்
கோபுரமா கொட்டி வச்சேன்
குளத்திலே ஸ்நானம் பண்ணி
கோலு போல நாமமிட்டு
ஆத்துலே ஸ்நானம் பண்ணி
அருகு போல நாமமிட்டு
பொழுதேறிப் போகுதிண்ணு
வெள்ளி யொறைச்சி நாமமிட்டு
இத்தனையும் ஒப்பதமாம்-எங்க

சப்பாணிப் பிள்ளையார்க்கு

பிள்ளையார் மிகவும் எளிமையான தெய்வம். சிறுவர்களின் விளையாட்டு பாடல் முதல், இலக்கியப்பாடல்கள், வேத மந்திரங்கள், நவீன தமிழ் கவிகள், கிராமிய பாடல்கள் என தொடர்ந்து களத்துமேட்டு பாடல்கள் வரை எல்லா தரப்பு மக்களாலும் அணுகப்படுபவர். அந்த பாடல்கள் போற்றுதல் முதல் கேலி கிண்டலாகப் பாடும் அளவு மக்கள் மனதுக்கும் நெருக்கமான உறவானவர். டாம்பீகமற்றவர். எளிமையாக ஒரு பிடி களிமண்ணையோ, நாட்டு பசுவின் சாணத்தையோ அல்லது மஞ்சளையோ பிடித்துவைத்துவிட்டால் பிள்ளையார் வந்துவிடுவார். அருகம்புற்களை பிடுங்கிப் போட்டால் போதும்; மாலைகள் ஆபரணங்கள் கேட்கமாட்டார். மரத்தடி, குளக்கரை என்று எளிமையாக இருப்பார். இவையனைத்துமே விநாயகரின் எளிமையை மட்டுமல்ல அனைவராலும் அனுகப்படுபவர் என்பதற்கு உதாரணங்களாகும்.



கிராமங்களில் சிறுவர்கள் ஓணானை கொல்வதும், கறுப்பு எறும்புகளுக்கு தீனி வைப்பதும்கூட கணபதியின் பொருட்டான விளையாட்டுதான். கணபதியை வணங்காவிட்டால காரியங்கள் கெடுத்துவிடுவார். உருப்படவிடமாட்டார்  என்று அச்சுறுத்தி தாதாவுக்கு மாமூல் கொடுப்பதுபோல, சிலர் சொல்வார்கள். அது அப்படியல்ல, அவர் புத்தியின் அடையாளம். காரியங்கள் துவங்கும் முன்னர், செக்குமாடு மாதிரி ஒரே கோணத்தில் போகாதே சிந்தித்து, விழிப்போடு சாதுர்யமாகச் செய் என தூண்டுவதே அதன் சாராம்சம். நாம் சொல்வதைவிட வெள்ளைக்காரன் வந்து தோப்புக் காரணத்தை சூப்பர் பிரைன் யோகா என்பர் சொன்னால்தான் நமக்கு அதன் மகத்துவம் புரிகிறது.






இன்னும் ஒரு விஷேசமான விஷயம், கொங்கதேசத்தில் பிள்ளாயா நோம்பி என்று உண்டு. ஒரு சிறுமியை பிள்ளையார் மனைவியாக பாவித்து உட்கார வைத்து தினமும் இரவு கும்மி அடித்து பாடல்கள் பாடி மகிழ்வர். சாணியில் பிள்ளையார் பிடித்து ஊரில் உள்ள பெண்கள் பூக்கள் கொண்டுவந்து சூட்டுவர். தைப்பூசத்திற்கு முந்தைய இரவு நிறைவு பெறும் இந்த விழா 7-9-11 நாட்கள் என்று சூழலை பொறுத்து அந்தந்த கிராமத்தினர் கொண்டாடுவர். விழா துவங்கியதில் இருந்து தினமும் இரவு ஒன்றிரண்டு மணி நேரம் கும்மியடித்து பாடல்கள் பாடுவர். நிறைவு நாள் அன்று பிரசாதங்கள் படைத்து அந்த சிறுமிக்கு புது ஆடை எடுத்துக் கொடுத்து, இரவு முழுவதும் கும்மியும் பாடல்களும் பாடி, விடியற்காலை ஆற்றுக்கு எடுத்துச் செல்வர். பறைமேளம் அடிக்க, பந்தம் பிடித்து ஊர்வலம் போகும். கிராம தெய்வத்தின் கோயிலில் ஊர்வலம் நின்று தரிசனம் முடித்து ஆற்றோரத்தில் உள்ள விநாயகருக்கும் பூஜைகள் செய்வித்து, அந்த சிறுமிக்கு புத்தாடை அணிவித்து பின்னர் சாணிபிள்ளையாரை ஆற்றில் கரைத்துவிட்டு வீடுவந்து சேர்வார்கள். இந்த விழாவில் பாடப்படும் பாடல்கள் பக்தி, நகைச்சுவை என்று பலவாறாக இருக்கும். விநாயகர் மட்டுமின்றி கிருஷ்ணர் யசோதை உரையாடல், மாரியம்மன் பாட்டு, நகைச்சுவை பாட்டு என்று பலவாறான பாடல்கள் பாடப்படும்.

உதாரணத்திற்கு,
பூத்த நல்ல பருத்திக்குள்ள - ஏலேலோ
புள்ளி மானு மேயுதம்மா – ஏலேலோ
புள்ளி மான புடிச்சடைக்க – ஏலேலோ
புள்ளையாரு துணை வருவார் – ஏலேலோ

வெடிச்ச நல்ல பருத்திக்குள்ள – ஏலேலோ
வெள்ளி மானு மேயுதம்மா – ஏலேலோ
வெள்ளி மான புடிச்சடைக்க – ஏலேலோ
விநாயகர் துணை வருவார் – ஏலேலோ ...

பிள்ளாயா பிள்ளாயா.. தேவேந்திர பிள்ளாயா...

பிள்ளாயா பிள்ளாயா.. எங்கே எங்கே போயிருந்த..

சில கம்யூனிச, திராவிட, தமிழ்தேசியவாதிகள் விநாயகர் தமிழ் கடவுள் அல்ல என்று பிழைப்புவாத மொழியரசியல் துவங்குவார்கள்; சரி யாரெல்லாம் தமிழ்கடவுள், யாரெல்லாம் வேத கடவுளர்கள், நிலத்திணை தெய்வங்கள் எவை எவை என்று கேட்டால் விடை இருக்காது. ஒருவர் விநாயகர் ஆரியக் கடவுள், ஏழாம் நூற்றாண்டுக்கப்புரம்தான் இங்கே வந்தார் என்றார். “ஆரியமாவது சோளமாவது; அதுதான் ஆரிய திராவிட கட்டுக்கதைகளை எப்பவோ பொய்னு நிரூபிச்சாச்சே! முதல்ல, நீங்க சொல்றமாதிரி ஏழாம் நூற்றாண்டுதான் வந்தார்னே வச்சிக்குவோம், ஆனா அதுக்கப்புறம் இங்க வந்து செட்டில் ஆனவன்லாம் பூர்வகுடிங்கறான் மண்ணின் மைந்தன்ங்கறான், அப்படி பார்த்தா விநாயகர் இம்மண்ணின் மரபுகளோடும் கலாசாரத்தோடும் கலந்த தெய்வந்தா. ரெண்டாவது, ஏழாம் நூற்றாண்டுங்கரது பொய்னு ஏராளமான ஆதாரங்கள் நிரூபிச்சுருக்கு. சிந்தாமணியில் காவிரி உருவானதற்கு காக்கை அகத்தியரின் கமண்டலம் தட்டிவிட்டதையும், பிள்ளையார்பட்டி கோயிலின் காலம் 5ம் நூற்றாண்டு என்ற தொல்லியல் தகவலும், உத்திரமேரூர் மற்றும் வேளச்சேரி புடைப்புச் சிற்பங்களின் தொன்மையும், மேலும் திருமூலர், அப்பர் போன்றவர்களின் பாடல்களும் கணபதியின் தொன்மையை விளங்கச் செய்யும்னு என்று பதிலளிக்கப்பட்டது..



இன்னொரு திராவிடர், “விநாயகரை விட நாய் உசத்தி, விநாயகர் தண்ணில போட்டா முழுகி போறாரு, நாய் நீந்தி வந்துரும்; செலைய தூக்கி எறிஞ்சிட்டு ஒரு நாய வளத்துங்க  னு கிண்டலா அறிவ காட்டுனாரு. “தங்கத்தை விட சொரப்புருடை உசத்தி தெரியுமா..? தங்கம் தண்ணில முழுகிரும், சொரப்புருடை மெதந்துகிட்டு வந்திடும்; என்கிட்டே சொரப்புருடை நெறைய இருக்கு, சீக்கிரம் உங்கூட்ல இருக்கற தங்கத்த எடுத்தாங்க னு நண்பன் மூக்கறுத்துவிட்டான்.

பாலும், தேனும், பாகும், பருப்பும் படைத்து சங்கத்தமிழ் மூன்றையும் பிள்ளையாரிடம் வேண்டிக் கேட்ட ஔவையாருக்கு அறிவு குறைவு போலும்.

இத்தனை நாட்கள், திராவிட தடியர்களின் ஆபாச விமர்சனங்களையும் தாண்டி கணபதியார் பாமரர் முதல் படித்த மேதைகள் வரை தேசங்கள் கடந்து இஷ்ட தெய்வமாக பரிபாலனம் செய்வதே அவர்களுக்கான எளிமையான பதில். 

No comments:

Post a Comment