Saturday 30 August 2014

விநாயகர் நினைவுகள்

கொங்கதேச ஆவணங்களில் விநாயகர் பற்றிய குறிப்புகள் ஏராளமான இடத்தில் காணலாம். அண்ணமார்சாமி கதையில் பிள்ளை வரம் நிறைவேற குளம் வெட்டி விநாயகர் பிரதிஷ்டை செய்தார் கோளாத்தாக் கவுண்டர். அது மட்டுமின்றி அண்ணமார் கதை முழுக்கவே விநாயகர் வழிபாடு இருப்பதை காண முடியும். 




தீரன் சின்னமலை காரையூர் மேலப்பாளையத்தில் ஐந்தடி விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்வித்தார். வெள்ளோட்டில் சாத்தந்தை கூட்டத்தில் பிறந்து வீரபாண்டியன் அமைச்சராகி பின்னர் ஊத்துக்குளியில் நாடமைத்துப்போன காளிங்கராயர் வாய்க்கால் வெட்டியபின், அது துவங்கும்  இடத்தில் நெளிந்த வாய்க்கால் அமைப்புக்கு யோசனை வர காரணமான நாகருக்கு கோயில் வைத்தார். அதே கோயிலில் விநாயகரும் உண்டு. காளிங்கராயர் பிற்கால பாண்டியர் காலத்தவர் என்பதால் விநாயகரும் அவர் பிரதிஷ்டை செய்ததே என்று நம்பலாம். 


கொங்கதேசவரலாற்றில் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு தலையநாடு கன்னிவாடி கன்னகூட்ட மன்றாடியார்களுடையது. அவர்கள் கன்னிவாடியில் இருந்து மோரூர் இடம்பெயர்ந்த போது அவர்கள் பூர்வீகத்தில் இருந்த வெள்ளைவிநாயகரை மோரூர் நாட்டிலும் பிரதிஷ்டை செய்தனர். இவர்கள் குலகுரு ஒருமுறை சஞ்சாரம் வந்தபோது கோயில் பண்டாரம் அவமரியாதை செய்யவே கோயில் வெள்ளைவிநாயகரிடம் வேண்டி பாடவும் குபேர மூலையை பார்த்திருந்த விநாயகர் விக்ரகம் எம மூலை பக்கம் திரும்பிவிட்டது. பயந்து போன மக்கள் பட்டக்காரரிடம் சொல்லவே அவர் குலகுருவிடம் உண்மையை விளக்கி மன்றாடவே திரும்பவும் வெள்ளைவிநாயகரை  வேண்டிப்பாட  சிலை பழைய நிலைக்கு திரும்பியது.
மோரூர் பாம்பலங்காரர் (நாகபூஷனர்)கோயிலில்
உள்ள வெள்ளைவிநாயர் 

மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயிலில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்கள் தேசத்தை பார்த்த நிலையில் விநாயகரை பிரதிஷ்டை செய்துள்ளனர். அவை இன்றும் சேர விநாயகர், சோழ விநாயகர், பாண்டிய விநாயகர் என்று அழைக்கபடுகிறது. 



கீழ்க்கரை பூந்துறை நாடு திருசெங்கோட்டு மலையில் வரடிக்கல்லில் இருக்கும் உச்சிப்பிள்ளையார் பிரசித்தி பெற்றவர். ஒருவருடம் பவுர்ணமி தோறும் மலைக்கு வந்து வரடிக்கல் பிள்ளையாரை வலம் வந்தால் குழந்தை பாக்கியம் உண்டு என்பது ஐதீகம். திருசெங்கோட்டு மலையில் உள்ள தீர்த்தங்களில் முதல் தீர்த்தமே கணபதி தீர்த்தம்தான். அதை கணபதியே உமையம்மையின் பூஜை தேவைகளுக்காண நீருக்காக உருவாக்கினார் என்பது புராண வரலாற்றுச் செய்தி.
வரடிக்கல் பாண்டீஸ்வரர் கோயில் மற்றும்
விநாயகர் கோயில் (உச்சிப்பிள்ளையார்)


திருச்செங்கோட்டு கோயில் ராஜகோபுர அத்தா மண்டபத்தில்
இருக்கும் பிரம்மாண்ட விநாயகர் சிலை 

 அதே கீழ்க்கரை பூந்துறை நாட்டில் மொளசி சமஸ்தானதிற்குட்பட்ட பட்லூர் காணியின் நட்டாத்தீஸ்வரர் கோயிலில் கிழக்கு பார்த்த விநாயகர் விக்ரகம் இருந்தது (தற்போது ‘திருப்பணி என்னும் பேரில் தெற்கு பார்த்து திருப்பட்டுள்ளது; கொங்கதேசத்தில் தெற்கு பார்த்து எந்த விநாயகரும் இல்லை என்பது பயப்பட வேண்டிய விஷயம்). ஒருமுறை காவிரியில் வெள்ளம் வந்தபோது கோயில் குருக்களின் வேண்டுதலுக்கிறங்கி வெள்ளம தணிந்ததை கொங்குமண்டலச் சதகம் சொல்கிறது. 


பட்லூர் காணிக்குட்பட்ட நட்டாத்தீஸ்வரர் கோயில் 

சுந்தரருக்கு பொன் கொடுக்க சிவபெருமான் பிள்ளையாரை ஆய்மகளிடம் அடகு வைத்த நிகழ்வு வெஞ்சமாங்கூடலூரில் நடந்தது. திருமுருகன்பூண்டியிலே சுந்தரரின் களவுபோன பொருட்களை மீட்க விநாயகப்பெருமான் கூப்பிட்டு வழிகாட்டியதால் கூப்பிடு பிள்ளையாரானார். பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கென கொண்டுவந்த பிள்ளையார் வண்டி அச்சாணி முறியவே இறக்கி வைத்த இடத்தில் ஸ்தாபிதமாகிவிட்டார். அந்த க்ஷேத்ரமே இன்றைய புகழ்பெற்ற ஈச்சனாரி விநாயகர் ஆகும்.



கொங்கதேச குடிகளின் மங்கள சடங்குகள் அனைத்துமே விநாயகரை தொழுதே செய்யப்படுகின்றன. கல்யாணத்திற்கு பெண் பார்க்க துவங்குவதில் தொடங்கி, தாலிக்கு பொன் எடுத்து கொடுக்கும்போதும் (மங்கிளியத்துக்கு கொடுத்தல்), முஹுர்த்தக்கால் போடையிலும், மாப்பிள்ளை அழைப்பு வேளை என பல முறை கணபதி வழிபடப்படுவார். கல்யாணம் துவங்கும்போதும், முடிந்த பின்னரும், முடிந்தபின் வீடு புகுமுன் மணமகன்/மணமகள் ஊர் விநாயகர் கோயிலிலும், வீட்டிற்கு வந்து முதல் காரியமாகவும், தாலி நூல் மாற்றும்போதும் (தாலி வில்லையை விட மஞ்சள் கயிரே முக்கியத்துவம் வாய்ந்தது என்பது வழக்கம்) விநாயகர் வழிபாடு நடக்கும். பெண் வீட்டில் கல்யாணம் செய்வதே முறை என்றாலும், தற்போது முறைகெட்டு மண்டபங்களில் பலர் கல்யாணம் செய்வதால் அந்த கல்யாண சத்திரங்களிலேயே விநாயகர் சன்னதி கட்டிவைத்துவிட்டனர். கொங்கதேசத்தின் சிறப்பு வாய்ந்த கல்யாணப் பாடலான மங்கள வாழ்த்தே கணபதியை தொழுதுதான் துவங்குகிறது.


கொங்கதேசத்தில் கிராமங்கள் நிர்மாணம் செய்யப்பட்டபோது மேற்கே அரசமரங்கள் நடப்பட்டதோடு அங்கு விநாயகர் நிறுவி வழிபடப்பட்டார். அதுமட்டுமின்றி கிராமத்தின் கன்னிமூலையில் விநாயகர் இருப்பது பொதுவான விதி. கொங்கதேசத்தின் ஏராளமான சிற்றிலக்கியங்கள் ஆவணங்கள் விநாயகர் வழிபாட்டோடுதான் துவங்குகின்றன.



நிலத்தை உழத்துவங்கையிலும், விதை விதைக்க துவங்கையிலும், கதிரருக்கும்போதும் விநாயகர் வழிபாடு உண்டு. அதற்கான நாட்டுப்புறப் பாடல்கள் கூட கொங்கதேசப்பகுதிகளான தர்மபுரி மற்றும் அரூர் பகுதிகளில் உள்ள கொங்கூர் மற்றும் கொங்கவேம்பு கிராமங்களில் சேகரிக்கப்பட்டுள்ளது. கொங்கதேசத்தில் பட்டிப்பொங்கல் என்று சொல்லப்படும் மாட்டுப்பொங்கலிலும் கணபதி வழிபாடு உண்டு.

உழவுப்பணியின் போது பாடப்படுவது,

காளையே ஏறு...

முந்தி முந்தி வினாயகனே!
முக்கண்ணனார் தம் மகனே!
கந்தருக்கு முன் பிறந்த
காளைக் கணபதியே!-(காளையே)
வேலருக்கு முன் பிறந்த
விக்கினரே முன் நடவாய்,
ஊருக்கு மேற்காண்டே
ஒசந்த தொரு வெப்பாலை.
வெப்பாலை மரத்தடியில்
சப்பாணி பிள்ளையாராம்.
சப்பாணி பிள்ளையார்க்கு,
என்ன என்ன ஒப்பதமாம்!
நீரு முத்தும் தேங்காயாம்,
நிமித்தியமாம் பிள்ளையார்க்கு,
கொத்தோடு தேங்காயாம்
குலைநிறைய வாழைப்பழம்
இத்தனையும் ஒப்பதமாம்-எங்க
சப்பாணி பிள்ளையார்க்கு-(காளையே)

வண்டு மொகராத-ஒரு
வண்ண லட்சம் பூ வெடுத்து
தும்பி மொகராத
தொட்டு லட்சம் பூவெடுத்து
எறும்பு மொகராத
எண்ணி லட்சம் பூவெடுத்து
பாம்பு மொகராத
பத்து லட்சம் பூவெடுத்து
வாரி வந்த பூவையெல்லாம்
வலப்புறமாய்க் கொட்டி வச்சேன்
கொண்டு வந்த பூவை யெல்லாம்
கோபுரமா கொட்டி வச்சேன்
குளத்திலே ஸ்நானம் பண்ணி
கோலு போல நாமமிட்டு
ஆத்துலே ஸ்நானம் பண்ணி
அருகு போல நாமமிட்டு
பொழுதேறிப் போகுதிண்ணு
வெள்ளி யொறைச்சி நாமமிட்டு
இத்தனையும் ஒப்பதமாம்-எங்க

சப்பாணிப் பிள்ளையார்க்கு

பிள்ளையார் மிகவும் எளிமையான தெய்வம். சிறுவர்களின் விளையாட்டு பாடல் முதல், இலக்கியப்பாடல்கள், வேத மந்திரங்கள், நவீன தமிழ் கவிகள், கிராமிய பாடல்கள் என தொடர்ந்து களத்துமேட்டு பாடல்கள் வரை எல்லா தரப்பு மக்களாலும் அணுகப்படுபவர். அந்த பாடல்கள் போற்றுதல் முதல் கேலி கிண்டலாகப் பாடும் அளவு மக்கள் மனதுக்கும் நெருக்கமான உறவானவர். டாம்பீகமற்றவர். எளிமையாக ஒரு பிடி களிமண்ணையோ, நாட்டு பசுவின் சாணத்தையோ அல்லது மஞ்சளையோ பிடித்துவைத்துவிட்டால் பிள்ளையார் வந்துவிடுவார். அருகம்புற்களை பிடுங்கிப் போட்டால் போதும்; மாலைகள் ஆபரணங்கள் கேட்கமாட்டார். மரத்தடி, குளக்கரை என்று எளிமையாக இருப்பார். இவையனைத்துமே விநாயகரின் எளிமையை மட்டுமல்ல அனைவராலும் அனுகப்படுபவர் என்பதற்கு உதாரணங்களாகும்.



கிராமங்களில் சிறுவர்கள் ஓணானை கொல்வதும், கறுப்பு எறும்புகளுக்கு தீனி வைப்பதும்கூட கணபதியின் பொருட்டான விளையாட்டுதான். கணபதியை வணங்காவிட்டால காரியங்கள் கெடுத்துவிடுவார். உருப்படவிடமாட்டார்  என்று அச்சுறுத்தி தாதாவுக்கு மாமூல் கொடுப்பதுபோல, சிலர் சொல்வார்கள். அது அப்படியல்ல, அவர் புத்தியின் அடையாளம். காரியங்கள் துவங்கும் முன்னர், செக்குமாடு மாதிரி ஒரே கோணத்தில் போகாதே சிந்தித்து, விழிப்போடு சாதுர்யமாகச் செய் என தூண்டுவதே அதன் சாராம்சம். நாம் சொல்வதைவிட வெள்ளைக்காரன் வந்து தோப்புக் காரணத்தை சூப்பர் பிரைன் யோகா என்பர் சொன்னால்தான் நமக்கு அதன் மகத்துவம் புரிகிறது.






இன்னும் ஒரு விஷேசமான விஷயம், கொங்கதேசத்தில் பிள்ளாயா நோம்பி என்று உண்டு. ஒரு சிறுமியை பிள்ளையார் மனைவியாக பாவித்து உட்கார வைத்து தினமும் இரவு கும்மி அடித்து பாடல்கள் பாடி மகிழ்வர். சாணியில் பிள்ளையார் பிடித்து ஊரில் உள்ள பெண்கள் பூக்கள் கொண்டுவந்து சூட்டுவர். தைப்பூசத்திற்கு முந்தைய இரவு நிறைவு பெறும் இந்த விழா 7-9-11 நாட்கள் என்று சூழலை பொறுத்து அந்தந்த கிராமத்தினர் கொண்டாடுவர். விழா துவங்கியதில் இருந்து தினமும் இரவு ஒன்றிரண்டு மணி நேரம் கும்மியடித்து பாடல்கள் பாடுவர். நிறைவு நாள் அன்று பிரசாதங்கள் படைத்து அந்த சிறுமிக்கு புது ஆடை எடுத்துக் கொடுத்து, இரவு முழுவதும் கும்மியும் பாடல்களும் பாடி, விடியற்காலை ஆற்றுக்கு எடுத்துச் செல்வர். பறைமேளம் அடிக்க, பந்தம் பிடித்து ஊர்வலம் போகும். கிராம தெய்வத்தின் கோயிலில் ஊர்வலம் நின்று தரிசனம் முடித்து ஆற்றோரத்தில் உள்ள விநாயகருக்கும் பூஜைகள் செய்வித்து, அந்த சிறுமிக்கு புத்தாடை அணிவித்து பின்னர் சாணிபிள்ளையாரை ஆற்றில் கரைத்துவிட்டு வீடுவந்து சேர்வார்கள். இந்த விழாவில் பாடப்படும் பாடல்கள் பக்தி, நகைச்சுவை என்று பலவாறாக இருக்கும். விநாயகர் மட்டுமின்றி கிருஷ்ணர் யசோதை உரையாடல், மாரியம்மன் பாட்டு, நகைச்சுவை பாட்டு என்று பலவாறான பாடல்கள் பாடப்படும்.

உதாரணத்திற்கு,
பூத்த நல்ல பருத்திக்குள்ள - ஏலேலோ
புள்ளி மானு மேயுதம்மா – ஏலேலோ
புள்ளி மான புடிச்சடைக்க – ஏலேலோ
புள்ளையாரு துணை வருவார் – ஏலேலோ

வெடிச்ச நல்ல பருத்திக்குள்ள – ஏலேலோ
வெள்ளி மானு மேயுதம்மா – ஏலேலோ
வெள்ளி மான புடிச்சடைக்க – ஏலேலோ
விநாயகர் துணை வருவார் – ஏலேலோ ...

பிள்ளாயா பிள்ளாயா.. தேவேந்திர பிள்ளாயா...

பிள்ளாயா பிள்ளாயா.. எங்கே எங்கே போயிருந்த..

சில கம்யூனிச, திராவிட, தமிழ்தேசியவாதிகள் விநாயகர் தமிழ் கடவுள் அல்ல என்று பிழைப்புவாத மொழியரசியல் துவங்குவார்கள்; சரி யாரெல்லாம் தமிழ்கடவுள், யாரெல்லாம் வேத கடவுளர்கள், நிலத்திணை தெய்வங்கள் எவை எவை என்று கேட்டால் விடை இருக்காது. ஒருவர் விநாயகர் ஆரியக் கடவுள், ஏழாம் நூற்றாண்டுக்கப்புரம்தான் இங்கே வந்தார் என்றார். “ஆரியமாவது சோளமாவது; அதுதான் ஆரிய திராவிட கட்டுக்கதைகளை எப்பவோ பொய்னு நிரூபிச்சாச்சே! முதல்ல, நீங்க சொல்றமாதிரி ஏழாம் நூற்றாண்டுதான் வந்தார்னே வச்சிக்குவோம், ஆனா அதுக்கப்புறம் இங்க வந்து செட்டில் ஆனவன்லாம் பூர்வகுடிங்கறான் மண்ணின் மைந்தன்ங்கறான், அப்படி பார்த்தா விநாயகர் இம்மண்ணின் மரபுகளோடும் கலாசாரத்தோடும் கலந்த தெய்வந்தா. ரெண்டாவது, ஏழாம் நூற்றாண்டுங்கரது பொய்னு ஏராளமான ஆதாரங்கள் நிரூபிச்சுருக்கு. சிந்தாமணியில் காவிரி உருவானதற்கு காக்கை அகத்தியரின் கமண்டலம் தட்டிவிட்டதையும், பிள்ளையார்பட்டி கோயிலின் காலம் 5ம் நூற்றாண்டு என்ற தொல்லியல் தகவலும், உத்திரமேரூர் மற்றும் வேளச்சேரி புடைப்புச் சிற்பங்களின் தொன்மையும், மேலும் திருமூலர், அப்பர் போன்றவர்களின் பாடல்களும் கணபதியின் தொன்மையை விளங்கச் செய்யும்னு என்று பதிலளிக்கப்பட்டது..



இன்னொரு திராவிடர், “விநாயகரை விட நாய் உசத்தி, விநாயகர் தண்ணில போட்டா முழுகி போறாரு, நாய் நீந்தி வந்துரும்; செலைய தூக்கி எறிஞ்சிட்டு ஒரு நாய வளத்துங்க  னு கிண்டலா அறிவ காட்டுனாரு. “தங்கத்தை விட சொரப்புருடை உசத்தி தெரியுமா..? தங்கம் தண்ணில முழுகிரும், சொரப்புருடை மெதந்துகிட்டு வந்திடும்; என்கிட்டே சொரப்புருடை நெறைய இருக்கு, சீக்கிரம் உங்கூட்ல இருக்கற தங்கத்த எடுத்தாங்க னு நண்பன் மூக்கறுத்துவிட்டான்.

பாலும், தேனும், பாகும், பருப்பும் படைத்து சங்கத்தமிழ் மூன்றையும் பிள்ளையாரிடம் வேண்டிக் கேட்ட ஔவையாருக்கு அறிவு குறைவு போலும்.

இத்தனை நாட்கள், திராவிட தடியர்களின் ஆபாச விமர்சனங்களையும் தாண்டி கணபதியார் பாமரர் முதல் படித்த மேதைகள் வரை தேசங்கள் கடந்து இஷ்ட தெய்வமாக பரிபாலனம் செய்வதே அவர்களுக்கான எளிமையான பதில். 

Tuesday 26 August 2014

கொடுமுடி பண்டிதர்

பல ஆயிரம் ஆண்டுகளாக நம் தேசத்தில் வழக்கமாக இருந்த பஞ்சகவ்ய பயன்பாடு பிற்காலத்தில் நீறு பூத்த நெருப்பாக மறைந்திருந்தது. பிராமணர்கள் விடாது தங்கள் பூஜைகள், அபிசேகங்களில் பயன்படுத்தி வந்தனர். ஈ.வெ.ரா. இந்த பஞ்சகவ்யம் பற்றி நீண்ட/ஆழ்ந்த ஆராய்ச்சி செய்து அரவது ஆய்வு முடிவை  இவ்வாறு வெளியிட்டார், 'பார்ப்பான் மாட்டு மூத்திரத்த கொடுக்கறான் "நம்மாளு" வாங்கி குடிக்கறான்' என்றார். நம்மாளு என்று யாரையெல்லாம் கூட்டு சேர்த்தார் என்று தெரியவில்லை. பின்னாளில் கொடுமுடி டாக்டர் மூலமாக பஞ்சகவ்யத்தின் பலன்கள் வெகுஜனங்களுக்கு தெரிய வந்தது. (பாட்டன் சொல்வதை விட வெள்ளை கோட்டும், வெள்ளை தோலும் தற்கால அறிவியல் விளக்கப்படி சொன்னால்தானே ஏற்றுக்கொள்வோம்?). கொடுமுடி டாக்டருக்கு இதை தெரிவித்தவர் கொடுமுடி பண்டிதர். அவர் கூறிய வார்த்தை, பஞ்சகவ்யம் "வந்த நோய் போக்கும்; வரும் நோய் தடுக்கும்" என்று. வெளியே இருபது வருடம் பரப்பிய டாக்டருக்கு கிடைத்த அங்கீகாரம் பல நூற்றாண்டுகளாக, திராவிட இம்சைகளுக்கு இடையேயும் விடாது பின்பற்றி மக்களுக்கும் தந்து கொண்டிருந்த அந்த பிராமணர்களுக்கு எவ்வித அங்கீகாரமோ மரியாதையோ இல்லை என்பது வருத்தத்திற்குரியது. இன்று அவர்கள் புண்ணியத்தில் பல லட்சம் ஏழைமக்கள் எளிய மருத்துவ தீர்வை பெற்று ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். பல லட்சம் ஏக்கர் பூமிகள் வளமடைந்து சுபிட்சமாகியுள்ளது. ஏழை விவசாயிகள் உர நிறுவனங்களில் இருந்து - விஷ உரங்களில் இருந்து விடுதலை பெற்றுள்ளனர். அதன்மூலம் பல கோடி பேருக்கு நல்ல உணவு கிடைக்கிறது. பஞ்சகவ்யத்தை பழித்த ஈ.வெ.ரா.வின் சிஷ்யப்பிள்ளைகள் வெப்படை கோசாலைக்கு விடியற்காலை முக்காடு போட்டுவந்து மருந்து வாங்கி குடித்துக் கொண்டிருக்கிறார்கள் .

Monday 18 August 2014

நாட்டுப் பசுக்களுக்காக மத்திய அரசின் திட்டம்: ஒரு பார்வை

மோடி அரசை கொஞ்சம் விமர்சிச்சு எழுதினதால போட மாட்டாங்க னு நெனச்சன்.. போட்டுட்டாங்க... தமிழ்ஹிந்துவில்..

August 19, 2014

அச்சிட அச்சிட 
மத்திய அரசு நாட்டுப்பசுவினங்களுக்காக ஒதுக்கியுள்ள ரூ.500 கோடி திட்டம் என்பது மத்திய அரசின் எண்ணத்தில் நாட்டுப்பசுக்கள் பற்றிய சிறு எண்ணம் இருப்பதையும், தற்போது பசுக்கொலைகள் தொடர்வதால் பொதுமக்கள் மற்றும் ஹிந்து அமைப்புக்கள் மத்தியில் வலுத்து வரும் பா.ஜ.க. வெறுப்புணர்வை தணிக்கும் முயற்சியாகவுமே தெரிகிறது. எனவே, உண்மையில் இந்த அறிவிப்பின் சாதக பாதகங்கள் என்ன? தேவையான மாற்றங்கள் என்ன என்பதை மறு ஆய்வு செய்யவேண்டியுள்ளது.
http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=107580
(1) முதலில் பசுக்களுக்கு ஒதுக்கியிருக்கும் இந்த வருடத்திற்கான தொகையான ரூ.150 கோடியோ அல்லது ஐந்தாண்டு திட்டத்தில் ஒதுக்கப்படவுள்ள ரூ.500 கோடியோ மிக மிக சொற்பமானது என்பதை கருத்தில் கொள்ளல் வேண்டும். இது யானை பசிக்கு கடுகுச்சோறு போன்றதாகும். இந்த தொகைகள், அன்றாடம் ஆயிரக்கணக்கில் கொன்று தள்ளும் பசுக்கொலைக்கூடங்களுக்கான முதலீடு, நவீனமயமாக்க செலவிடப்படும் தொகைகளைவிட சொற்பமானதாகும். மேலும், ‘பிங்க் புரட்சி செய்து கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு போக்குவரத்து, குளிர் மையம், பேக்கிங், விளம்பரம் என பல்வேறு இனங்களில் 70% வரை மானியம், விற்பனை வரிச்சலுகை, வருமான வரிச்சலுகை என்று கணக்கிட்டு பார்த்தால் எங்கோ போய் நிற்கும். அதனோடு இந்த நிதி ஒதுக்கீட்டை ஒப்பிட்டால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
இந்த பிங்க் புரட்சி மூலம் வருஷம் சுமார் 26,000 கோடி வருமானம் கிடைக்கிறதாம். ஆண் எருமைகளையோ, சீமை மாடுகளையோ கொண்டு செல்வதை யாரும் எதிர்க்கப்போவதில்லை. ஆனால், நாட்டுப்பசுக்கள் வண்டி வண்டியாக கொலைக்கூடங்களுக்கு செல்வதைத்தான் ஜீரணிக்க முடிவதில்லை. எருமை மாமிசம் என்ற பேரில் பசு மாமிசம் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதை அதிகாரிகளே தெரிவிக்கிறார்கள். இவ்வளவு ஏற்றுமதியும் வெறும் ஆண் எருமை மற்றும் உதவா மாடுகள் மூலம் மட்டுமே நடக்கிறது என்பதை குழந்தை கூட நம்பாது என்பதும் அறிந்த விஷயமே. அகமதாபாத் போன்ற பெருநகரங்களில் தெருவில் சுற்றும் மாடுகளை பிடிக்கவரும் அரசு ஊழியர்களை தாக்குவோரை தடுக்க கேமரா பொருத்திய வண்டிகள் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சட்டவிரோதமாக கடத்தப்படும் பசுக்களை தடுக்க சுங்கச்சாவடிகளில் முறையான கண்காணிப்பு இருந்தாலே போதுமானது. ஆனால் அதவும் கூட இயலாத சூழலே தற்போது உள்ளது. பசுபாதுகாப்பிற்காக புதிய சட்டங்கள் தேவை இல்லை. இருக்கும் சட்டங்களை ஒழுங்காக நடைமுறைப்படுத்தினாலே பசுவதை பெருமளவு குறைந்துவிடும்.
970151_165348566993516_924177262_n
(2) இந்த திட்டத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் கொஞ்சம் அச்சமூட்டுபவையாக உள்ளன. அதைபற்றிய விளக்கங்களை அரசுத்துறைகள் விவரிக்க வேண்டும். உதாரணமாக “improve the genetic makeup” “upgrade nondescript cattle using elite indigenous breeds” “distribution of disease free high genetic merit bulls” “AI centre “ (Artificial Insemination) போன்றவை. இதே அறிக்கையில் கடைசியில் சொல்லப்பட்டபடி 80% நாட்டுப்பசுவினங்கள் இன்னும் அடையாளம் காணப்படாத-அங்கீகரிக்கப்படாத இனங்களாகவே உள்ளன. அப்படியிருக்க மேற்சொன்ன வாக்கியங்களை படித்தால் இந்த அங்கீகரிக்கப்படாத இனங்கள் உயர்ந்த ரகங்கள் என்று சொல்லப்படும் பசு ரகங்களால் கலப்படம் செய்து அழிக்கபடுமோ என்ற கேள்வி எழுகிறது. மேலும், செயற்கை கருவூட்டல் என்பது இயற்கைக்கு விரோதமானதும் நீண்டகால நோக்கில் கெடுதலையுமே விளைவிக்கும். சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 70 HF ரக காளைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Untitled
வெள்ளையர்கள் நம் நாட்டு பசுவினங்களை ஆய்வு செய்த பொது பெரும்பாலான பசுவினங்களை ஒரே இனத்தின் கிளைகள் என்று கூறிவிட்டார்கள். அதன்பின் நாமும் அதை பற்றி பெரிய அளவில் கவலைப்படாமல் அதை பெரிய மாற்றமின்றி இன்றளவும் பின்பற்றுகிறோம். இன்னும் வரையறை செய்யப்படாத எண்ணற்ற பசு ரகங்கள், அங்கீகரிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த திட்ட அறிவிப்பில் அதற்கான அறிவிப்புகள் இல்லாததோடு, அவ்வாறான வரையறைப்படுத்தாத பசுவினங்கள் கிர், சாஹிவால் போன்ற பசுக்களைக்கொண்டு மேம்படுத்தப்படும் என்று கூறியிருப்பது அவ்வினங்களின் தனித்துவம் அழிவின் விளிம்பிற்கு இட்டுச்செல்லும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
asdf
 (3) மூன்றாவதாக, இந்த அறிக்கையில் கோகுல் கிராம் மற்றும் கோசாலைகள் போன்ற அமைப்ப்புக்கள் குறைந்தது ஆயிரம் பசுக்களோடு செயல்படும் என்று அறிவித்திருப்பது தற்போதைக்கு சரியென பட்டாலும் நீண்ட கால நோக்கில் மறு ஆய்வு செய்யப்பட வேண்டியதே. அறிக்கையின் சாராம்சம், பசுக்களை ஒரு வணிகப்பொருளாகவும், பால் மெஷினாகவும் பார்க்கும் மனோபாவத்தை வளர்ப்பதாகவும் உள்ளது. நமது நோக்கம் விவசாயி வீட்டுப்பசு முறை. இதுதான் நமது நாட்டின் பூர்வீக கலாசாரம். ஒவ்வொரு குடும்பத்துக்கும் பரம்பரை பசுக்கள் இருக்கும். சாதாரண விவசாயி முதல் அரசர்கள் வரை இவை உண்டு. கல்யாணம் செய்யும்போது சீதனமாக வரும் பெண் வீட்டு பசு வர்க்கம் ஆண் வீட்டு பசு வர்க்கத்தோடு கலக்கும். இதனால் அந்த குடும்ப வாரிசுகளைப்போலவே அந்த குடும்பப்பசுவும் அதன் வர்க்கத்தை பெருக்கும். இது ஒரு அற்புதமான அமைப்பு. இப்படி குடும்பப்பசு முறை இருந்ததால்தான் பஞ்ச காலத்தில் கூட விவசாயிகள் மாடுகளை விற்காமல்-கொல்லாமல் இருந்தனர் என்று வெள்ளையர்கள் வியந்து எழுதினர். ஒரு பெண் புதிதாக கல்யாணமாகி வரும்போதும், ஒரு வீட்டுக்கு குடிபோகும்போதும் பால் காய்ச்சுவதே முதல் பணியாகும். அரசர்கள் பட்டாபிஷேகத்தின் போது அவர்கள் வர்க்க பசுவுக்கு மரியாதை செலுத்தி வணங்கப்படும். அது இன்றளவும் தொடர்கிறது.
கொங்கதேசம்-தென்கரை நாடு வேணாவுடையார் பட்டாபிஷேகத்தில்
கொங்கதேசம்-தென்கரை நாடு வேணாவுடையார் பட்டாபிஷேகத்தில்
மேலும் நாட்டுப்பசு என்பது மனிதன்-விவசாயம்-இயற்கை இம்மூன்றிற்கும் இடையிலான மிக முக்கியமான கண்ணியாகும். வெறும் பால் மெஷின், விவசாயப்பிராணி என்று பார்க்காமல், நேரடியாக நல்ல பால் பொருட்கள் மூலமும் மறைமுகமாக இயற்கை வேளாண்மைக்கு உதவுவதன் மூலம் நோய்கள் தவிர்ப்பு, மருத்துவ செலவினங்கள் தவிர்ப்பு, தேவையற்ற உர இறக்குமதிகள் தவிர்ப்பு, மனிதவளம் சேமிப்பு, சீமை மாடுகளுக்கு செலவாகும் மும்மடங்கு தீவன-நீர் சேமிப்பு, நோய் தாக்கு குறைவு என்று கணக்கிலடங்கா பலன்கள் கொட்டிக்கிடக்கின்றன. எனவே நாட்டுப்பசுக்களை வாழ்வின், இயற்கையின் அங்கமாக பார்க்கும் பார்வை அரசுத்துறையினருக்கு வர வேண்டும்.
1146521_10202688760132746_1246986842_n
பாராட்டும் விதமாக முதலில், நாட்டுப்பசுக்களை பற்றிய சிந்தனை வந்திருப்பதே பாராட்டக்கூடிய ஒன்றுதான். இரண்டவாது A2 பால் பற்றி அரசு தரப்பில் வந்துள்ள செய்தி என்பதும், பசுவின் மூலம் பெறக்கூடிய மருத்துவ பொருட்கள் போன்றவற்றை அங்கீகரித்திருப்பதும் பாராட்டலாம். விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் விருதுகள், சங்கங்கள் போன்றவையும் வரவேற்க வேண்டிய ஒன்று.
மோடி ஆதரவாளர்கள், ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி இயக்கங்கள் தங்கள் தலைமைக்கு அழுத்தம் தர வேண்டும். சாதுக்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி, திக்விஜய்சிங் போன்ற எதிர்கட்சியினர் கூட பசுவதைத் தடையை ஆதரித்தும் இன்னும் எந்த நடவடிக்கையும் இல்லாதிருப்பது வருத்தத்திற்குரியது.
நாட்டுப்பசுக்கள் அழிவிலிருந்து நிரந்தரமாக காப்பாற்ற என்னெல்லாம் செய்யலாம்? உதாரணமாக பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானையே எடுத்துக்கொள்வோம். ராஜஸ்தானில், மாநில அரசு ஒட்டகங்களை காக்க அவற்றை மாநில விலங்காக அறிவித்து, அதன் கொலையை முழுமையாக தடை செய்துள்ளது. (ஆயினும் பாரம்பரிய ஒட்டக ரேஸ் தடை செய்யப்படவில்லை என்பதை ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர்கள் கவனிக்கவும்!). இதே ராஜஸ்தானில் பசுவதை தடைக்கு என தனி அமைச்சகமே உள்ளது. அதேபோல யானைய காக்க மத்திய அரசு யானையை தேசிய பாரம்பரிய விலங்காக அறிவித்துள்ளது. இஸ்கான் பசுக்களுக்கென தனி பல்கலைக்கழகம் துவங்கப்போவதாக அறிவித்து வேலைகளை துவங்கியுள்ளார்கள். இதை மத்திய அரசும் பின்பற்ற வேண்டும். ஆயுர்வேத மருத்துவ கல்லூரிகளில் பஞ்சகவ்ய மருத்துவம் மற்றும் மருந்துகள் பற்றிய பாடங்கள் வைக்கபப்ட வேண்டும். அதுபோல நாட்டுப்பசுவை தேசிய விலங்காக அறிவித்து, நாட்டுப் பசுக்கொலையை முழுவதும் தடை செய்து, நாட்டுப்பசுக்களுக்கென தனி அமைச்சகம், ஆராய்ச்சி மையங்கள், நாட்டுப்பசு மைய பொருளாதார ஊக்குவிப்பு போன்றவற்றை அரசு கையிலெடுக்க வேண்டும்.
524963_351270591630053_449786875_n
நாட்டுப்பசுக்கள் வளர்ப்போர் ஸ்திரமான பொருளாதார தற்சார்பு நிலை எட்ட அடித்தளங்கள் உருவாக்காமல், வெறுமனே பசுவதை தடைச்சட்டம் என்று கொண்டுவந்தால் அது கடைசியில் விவசாயிகளுக்கு கேடாகத்தான் முடியும். அதாவது வெளிநாடுகளைப்போல நாட்டுப்பசுவின் A2 பாலுக்கு அதிக விலை, நாட்டுப்பசுவிலிருந்து பாலல்லாத பிற பொருட்கள் தயாரிப்பு, விவசாயத்தில் உரத்தேவையில் நாட்டுப்பசுக்களின் பங்கு, சந்தை விரிவாக்கம்-உருவாக்கம் போன்றவை, அவை குறித்த விழிபுணர்வு போன்றவற்றை செய்யாவிட்டால் பசுக்களே விவசாயிகளுக்கு பாரமாக போய்விடும். மேற்கூறிய முயற்சிகளை தற்போது அரசு சார்பற்ற தன்னார்வலர்களும் தொண்டு அமைப்புக்களும் செய்து வருகின்றன. ஆனால் தற்போதைய அறிவிப்பு அவ்விதமான அடித்தளங்கள் உருவாக்க உதவுமா என்று சந்தேகம் ஏற்படுத்துகிறது.

http://www.tamilhindu.com/2014/08/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE/

Monday 4 August 2014

சிறுவாரூட்டு வெள்ளாம

"சிறுவாரூட்டு வெள்ளாம ஊடு வந்து சேராது" னு எங்கூர்ல செலவாந்தரம் சொல்வாங்க.. நம்ம வாழ்வின் எல்லா விஷயங்களையும் நாமே அனுபவப்பட்டுத்தான் கத்துக்கனும்னா வாழ்க்கையே போதாது. எல்லா பிழைகளும் பின்னால் திருத்திக்கொள்ள முடியாததாகவும் இருக்கும். தனிமனித வாழ்க்கை, தொழில் என அனைத்து இடங்களிலும் இது பொருந்தும். "அவங்கவங்க விருப்பபடி விட்ருங்க!" னு அடிக்கடி நம்ம காதில் விழுவது எல்லாம், உலகமயமாக்களில் தனிமனிதத்துவம் திணிக்கப்படுவதன் வெளிப்பாடு. மத்திய சர்க்காரிலும் ஓசைப்படாமல், தனிமனித உரிமை மசோதா தாக்கல் செய்யப்பட்டு குடும்ப உறவுகளுக்கு வேட்டு சட்டரீதியாக தயாராகிவிட்டது. எத்தனை சட்டங்கள் போட்டாலும் நம் அறம் சார்ந்த நம் சமூக அமைப்பு அவற்றை அலட்சியமாக புறக்கணித்துவிடுகிறது. நம் வீட்டு பெரியவர்கள் அனுபவ பொக்கிஷங்கள். அவர்களின் அன்பும் அனுபவமுமே நமக்கொரு சொத்துதான். அரை மணிநேரம் அவர்களோடு உக்கார்ந்து பேசினாலே நம் மனதிற்கு தெம்பாக இருக்கும். முயற்சித்து பாருங்கள்.

பசுமை புரட்சியின் கதை - சங்கீதா ஸ்ரீராம்

என் நண்பர்கள் அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன். வாய்ப்புக் கிடைத்தால் அனைவரும் படிக்கவும். இதை விவசாய வரலாற்று நூல் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. இந்தியாவைபற்றிய, நம் சமூகம், வாழ்க்கைமுறை, வரலாறு, பாரம்பரியம், பொருளாதாரம் என அனைத்தை பற்றியும் வேறு தோற்றத்தை ஏற்படுத்தும். இந்தியாவின் வரலாற்றை வெள்ளையர் வருகைக்கு முன்-பின் என்று பிரித்து பார்க்கும் அளவு நம் பார்வையை மாற்றிக்காட்டும் திறனுள்ளது. நமது ஊர்-உலகம் முதல் மூளை வரை மேற்குலகின் தேவைகளுக்காக வடிவமைக்கப்படும் சூழலில் இந்த புஸ்தகம் பலருக்கும் பாடமாக இருக்கும். குறிப்பாக, மேற்குலக மேதாவிகள், சயிண்டிபிக் அபிமானிகள், முற்போக்கு-திராவிட சிந்தனையாளர்கள் போன்றோருக்கு. அறியாத பல தகவல்கள், மேற்கோள்கள் என அனைத்தும் அருமை. புதிதாக இதில் என்ன இருக்கப்போகிறது என்று இவ்வளவு நாள் இந்த புக்கை தவிர்த்ததை எண்ணி வருந்துகிறேன்.


உதாரணமாக, உரத்துறையின் தந்தை என்று சொல்லப்படும் லீபிக் என்பவர் தனது ஆராய்ச்சிகளின் குறைபாடுகளை பற்றி பகிரங்கமாக ஒப்புக்கொண்டதை சொல்லலாம். அவரது வரிகள் வெறும் அறிவியல் நோக்கில் மட்டுமல்லாது நம்மை பல கோணங்களிலும் சிந்திக்க செய்யும். லீபிக் தான் NPK அடிப்படையில் செடிகளின் உர தேவை பற்றிய ஆய்வை வெளியிட்டவர். அதிர்ச்சி என்னவென்றால், அவர் 1872 களில் குறைபாடு என்று ஒப்புக்கொண்ட முறையைப் பின்பற்றித்தான் இன்றளவும் யூரியா, டி ஏ பி, பொட்டாஷ், கலப்புரம் போன்றவற்றை பின்பற்றி வருகிறோம். அதற்கு அரசாங்கம் வருடந்தோறும் பல ஆயிரம் கோடி மானியங்களும் உர நிறுவனங்களுக்கு தருகிறது.

திரு.தரம்பால் அவர்களைப் போலவே வெள்ளையர்கள் ஆவணங்களை வைத்தே அவர்களை துகிலுரித்து காட்டியுள்ளார் ஆசிரியர். நாட்டுப்பசுக்களின் தேவை, முக்கியத்துவம், வரலாறு, சீமை மாடுகள் வந்த கதை, பரவலாக்கப்பட்ட கதை அதனால் ஏற்ப்பட்ட சமூக பொருளாதார மாற்றங்கள் என இந்த புத்தகத்தின் ஆசிரியருக்கு "வெண்மை புரட்சியின் கதை" என்ற அடுத்த புத்தகத்தை நீங்கள் எழுத வேண்டும் என்று கோரிக்கையும் வைக்கத் தோன்றுகிறது.

திருமதி சங்கீதா ஸ்ரீராம் அவர்கள் வலைப்பூ: http://www.sangeethasriram.blogspot.in