Tuesday 31 December 2013

ராஜதந்திரம் என்பது


ராஜதந்திரம் என்பது அக்காலங்களில் தங்கள் நாட்டையும் மக்களையும் பகைவரிடம் இருந்து காப்பாற்ற தீட்டப்பட்ட வழிமுறைகளாக இருந்தது. ஆனால் இன்று தான் சொந்த குடிமக்களை ஏமாற்ற செய்கின்ற சூழ்ச்சி, தங்கள் மேல் உள்ள பழி/குற்றசாட்டுகளை மக்கள் பார்வையில் இருந்து மறைக்க மேற்கொள்ளப்படும் அனைத்து பிரயத்தனங்களும் ராஜதந்திரம் என்னும் வரையறைக்குள் வந்தது காலக்கொடுமை. அப்படிப்பட்ட ராஜதந்திரம் ஒன்றை இங்கு கூறுகிறேன்.

போன வருட பத்ம விருதுகளின் பட்டியலில் விவசாயிகள் மத்தியிலோ, இயற்கை ஆர்வலர் மத்தியிலோ பெரிதும் பரிச்சயமில்லாத புதுச்சேரி திரு.வேங்கடபதி அறிவிக்கபட்டிருந்தார். ஏன்? பின்னணி என்ன?

அன்றைய சூழலில் மரபணு மாற்ற பயிர்களுக்கான எதிர்ப்பு உச்சத்தில் இருந்தது. அதற்கான மசோதாவை தாக்கல் செய்ய விடாமல் பெரும் போராட்டங்கள் நடந்து வந்தன (பின்னால் பெட்ரோல் விலையை உயர்த்தி, மக்கள் அந்த கோபத்தில் கத்தி கொண்டிருக்க, பாராளுமன்றத்தில் சத்தமில்லாமல் மரபணு மாற்ற மசோதாவை நிறைவேற்றி விட்டது வேறு விஷயம்!)

இயற்கை-விவசாயம்-விவசாயிகள் நலனில் எவ்வித கொள்கை சமரசமற்ற போக்கை கடைப்பிடித்து வருபவர் நம்மாழ்வார். 60 வருட சேவை, புத்தகங்கள், நடைபயணங்கள், போராட்டங்கள், பேச்சுக்கள், பயணங்கள், இயக்கங்கள் என சாதனை பட்டியல் மிக பெரிதாக நீளும். பல விவசாயிகள்-இயற்கை ஆர்வலர்கள் இவரை கடவுளாக வீட்டில் படத்தை மாட்டி வைத்து பார்ப்பர். சுனாமியால் பாதிக்கப்பட்டு வீணாய்ப்போன பல ஆயிரம் ஏக்கர நிலங்களை தன் இயற்கை அறிவால் மீட்டு தந்தவர். இந்தியா மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும் இவரது சேவை நீண்டது. இப்படிப்பட்ட இவருக்கு இதுவரை அரசின் எந்த அங்கீகாரமும் கிடையாது. காரணம் அரசு செய்யும் தில்லு முல்லு வேலைகளை அப்பட்டமாக கேள்வி கேட்பார். மக்களிடம் விழிப்புணர்வு உண்டு பண்ணுவார். 

மறுபக்கம், திரு வேங்கடபதி மரபணு மாற்றத்தின் மூலம் புதிய ரகங்களை உருவாக்கியவர். அவரை விருது வழங்கி கவுரவிப்பதால் மக்கள் மத்தியில் மரபணு மாற்றத்திற்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும், மரபணு மாற்ற விதை எதிர்ப்பு போராட்டங்கள் பிசுபிசுக்கும் என்றும் கணக்கு. அவரே தமிழரும் ஆவதால் தமிழகத்திலும் பெரிய எதிர்ப்பு குரல் இருக்காது. 

நம்மாழ்வாருக்கு இவர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மக்கள் மனதில் பெரும் உயரங்களை தொட்டு விட்டார். இந்திய விருதுகள் வேண்டுமானால் அங்கீகாரம் பெற இவர் உதவியை நாடலாம். இந்திய விருதுகளின் நிலை இப்படி இருப்பதினால்தான் ப்ளே பாய்கு நிர்வாண போஸ் கொடுத்த ஷெர்லின் சோப்ரா பாரத ரத்னா விருது கேட்டாள். 

கேவலமான யோசனை பலிக்காவிட்டாலும் கூட இதுவும் இன்றைய ராஜதந்திரதுக்கு சிறந்த உதாரணமே!


No comments:

Post a Comment